மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன் மீண்டும் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை, வழங்க ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து சிறிலங்கா பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்தை மீள்நிலைப்படுத்தல் ஆகியவற்றில் சிறிலங்கா அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியதால் தான், ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைப்பது சாத்தியமாகியது.

இது நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றி மாத்திரமல்ல, நாட்டுக்கே கிடைத்துள்ள வெற்றி

ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்துள்ளதன் மூலம், சிறிலங்காவின் ஆடை உற்பத்திகளும், ஏனைய உற்பத்திகளும், ஐரோப்பிய சந்தைக்குள் நுழைய முடியும். இதனால் வேலை வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும்.

ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.