களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட வத்தளை, ஜா–எல, வெலிசறை, கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் பாதசாரிகளின் உடமைகளை கொள்ளையிடும் ஆயுதம் தரித்த முகமூடிக் கொள்ளையர்கள் நடமாடுவதாகவும் அதனால் அப்பகுதி மக்கள் மிக அவதானத்துடன் இருக்கு மாறும் பொலிஸ் தலைமையகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த கொள்ளை கோஷ்டியானது பாரிய கொள்ளைகள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் முகமூடி கொள்ளையர்களை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழுவொன்று களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இதுவரை சிறப்பு பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் மேற்படி கொள்ளைக் குழுவானது இருவரைக் கொண்டது என தெரியவந்துள்ளதாகவும் கறுப்பு நிற மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் மற்றும் ஜக்கட்டுக்களை அணிந்தவாறு இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வத்தளை, ஜா–எல, வெலிசறை, கிரிபத்கொடை உள்-ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் இவர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாகவும் பாதசாரிகளின் உடமைகளை இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். ஆயுதங்களுடன் நடமாடும் இக்கொள்ளைக்கோஷ்டியானது எரிபொருள் நிரப்பு நிலயங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற கொள்ளைகளுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் அதனால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.