தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணின் ஒரு வயது மகனைக் கடத்திச் சென்ற இளைஞன், அந்தக் குழந்தை மீது திராவகம் ஊற்றிய கொடூரச் சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சோனி பிரசாத் (25) டெல்லியைச் சேர்ந்த பெண். இவரது கணவர் ஜம்னா (33) கூலித் தொழிலாளி. இவர்களது இரண்டு வயது மகன் ஆதித்யா.

சோனியை அண்மைக்காலமாக மங்கள் (27) என்பவர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சோனியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், சோனி தன்னை மணக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

எனினும், தான் ஏற்கனவே திருமணமானவள் என்றும் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் கூறிய சோனி, மங்களின் விருப்பத்திற்கு மறுப்புத் தெரிவித்தார். இது குறித்து தனது கணவர் ஜம்னாவிடமும் சோனி தெரிவித்திருந்தார். பிரச்சினையைப் பெரிதுபடுத்த விரும்பாத ஜம்னா, அந்தப் பகுதியை விட்டு வேறு பகுதிக்கு வீடு மாறிச் சென்றார்.

சோனி தன்னை மணக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மங்கள், எப்படியோ சோனியின் புதிய வீட்டைத் தேடிச் சென்றதுடன், வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஆதித்யாவைக் கடத்திச் சென்றார். தன் மகனைக் கடத்திச் சென்றது மங்கள்தான் என்று தெரிந்துகொண்ட சோனி, பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

தன் குழந்தையைத் தேடியேனும் தன்னிடம் சோனி வருவார் என்று எதிர்பார்த்திருந்த மங்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தைத் தந்தது. மேலும், பொலிஸ் தன்னைக் கைது செய்து விடும் என்று பயந்த மங்கள், ஆதித்யாவின் முகத்தில் திராவகத்தை ஊற்றிச் சிதைத்து குப்பைத் தொட்டி ஒன்றில் வீசிவிட்டுச் சென்றார்.

மறுநாள் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஆதித்யாவைக் கண்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தார். பொலிஸ் விசாரணையில் அது ஆதித்யா என்று தெரியவந்தது. இதையடுத்து, ஆதித்யாவைக் கடத்திய குற்றச்சாட்டில் கோவிந்த் (20) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியிருக்கும் மங்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் ஆதித்யாவின் விகாரமடைந்த முகத்தை சோனி பார்க்கக்கூடாது என மருத்துவர்கள் தடை செய்திருக்கிறார்கள். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தன் மகனைத் தூக்கி ஆறுதல் தர முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் சோனி!